Friday 22 August 2014

வாழ்க்கைன்னா இன்னான்னா......!!??

                சமீபத்தில் கிடைத்த ஒரு பத்து  நிமிட சிநேகம்,என்னை இதோ இங்கே வரவழைத்து இருக்கிறது ! அந்த அம்மாவிற்கு ஒரு ஐம்பது வயது இருக்கலாம்.கையில் ஒற்றை பை.அவரும் என்னை போல பேருந்திர்க்காகதான் காத்துக்கொண்டு இருக்கவேண்டும் ."ஒரு நிமிஷம்!இந்த பையை பாத்துக்கோங்க.இதோ வந்துவிடுகிறேன்." என அவசரமாக டிக்கெட் ரிசெர்வ்  செய்ய ஓடிய நான், திரும்பி வரும்போது,அவர் இரு கைகளையும் இருக்கை மீது வைத்து இடம் பிடித்து வைத்திருக்கும் காட்சியை பார்த்தவுடன், சிறிதாக புன்னகைத்துவிட்டு, மெல்லிய குரலில் நன்றி சொல்லி அமர்ந்தேன்.சிறிது நேரத்தில் எங்கள் உரையாடல் தொடங்கியது.




"ஒரு ஆன்டி வருவாங்க.அதுக்கு தான் மா காத்திருக்கேன்.நீங்க எங்க போகணும்?"

"ஒ!நான்.. இங்க பக்கம் தான் பாட்டி"

"நான் நர்ஸாக வேல செஞ்சேன் மா.அந்த காலத்துல  எல்லாம் நாங்க காலையிலேயே போயிருவோம் .இப்போலாம் அப்புடியா இருக்காங்க? ம்..! டாக்டர் வருவதற்கு முன்னாடியே எல்லாம் ரெடியா  எடுத்து வச்சிருவேன் மா.ஒத்த பைசா  யார்க்கிட்டயும் வாங்கினது இல்ல.பேசன்ட்  இனிப்பு ஏதாவது கொடுத்தா கூட வாங்கி வேற யாருக்காவது கொடுத்திருவேன் மா.ஒரு நாள் லேட்டா போனதில்ல .பதிமூனு வருஷம் நான் சர்வீசுல இருந்தேன்!யாரவது பதிமூன்று வருஷம் இப்படி இருக்க முடியுமா?

நான் அமைதியாக கேட்டுக் கொண்டுஇருந்தேன்

"என் மருமகள் சாயங்காலம் ஆனா,சிப்ஸ் அது இதுன்னு கண்டது வாங்கி பசங்களோட சாப்பிடுவா.நான் அந்த காலத்துலேயே மூனரை லட்சத்துக்கு இடம் வாங்கி, புள்ளைங்கள கரை சேத்துருக்கேன் மா.இப்போ அத சுலபமா அனுபவிக்குரான்களே  இதெல்லாம் யார்வீட்டு காசு?"என அலுத்துகொண்டார்.

"இப்போலாம் சேர்த்து வைக்கணும் என்கிற எண்ணமே ரொம்ப குறைஞ்சிருச்சு  பாட்டி " என்றேன்.

"கரெக்ட் மா." என்றவரிடம் அப்பப்போ பேசிக்கொண்டே எனது பேருந்து வரும் பிளாட்போர்மை கவனித்து கொண்டேன்.

'இந்த ஊர்காரங்க சட்டுன்னு பேச ஆரம்பிச்சிடுறாங்க இல்ல !நாமலாம் நெருங்கிய நண்பர்களிடம் கூட வீட்டு விஷயங்களை சொல்ல மாட்டோம்.ம்..அந்த கண்டக்டர் கிட்ட பாக்கி சில்லறை வாங்கணும்,வீட்டுக்கு போன் பண்ணனும்' இப்படி பல சிந்தனைகள் எனக்குள்ளே..!
பேருந்து வந்ததும் விடை பெற்றுக்கொண்டு போனபின்பும் ,இந்த நிகழ்ச்சி நெருடிக் கொண்டே இருந்தது.

'சரி','தப்பு' இதெல்லாம் நாம் உருவாக்கியது தான்.மற்ற உயிரினங்கள் எல்லாவற்றையும் விட மனிதன் உயர்ந்தவன்!மேன்மையானவன்!நான் தான் பெரியவன்! என எப்படி பட்டினத்துகாரன் தன்னை எங்கே கிராமத்தான் என்று சொல்லிவிடுவார்களோ என்று மாற்றி மாற்றி புதுபித்து கொள்கிறானோ ,அதுபோல நாமும் நம்மை செதுக்கி கொள்கிறோம்.

ஒரு இடத்தில் 'சரி' எனப்படுவது வேறொரு இடத்தில் 'தவறாக' காணப்படுகிறது.ஒரு வீட்டில் உள்ள பழக்க வழக்கங்கள் ,இன்னொரு வீட்டில் இல்லை.இந்த முரண்பாடுகளை புரிந்துக்கொள்ளவே நாம் பல இடங்களில் தவியாய் தவிக்கிறோம்!இதற்க்கு இடையில் நமக்கு நாமே முரண்பாடாய் வாழ்கிறோமே ,அது தெரியவில்லையா?

"நான் இப்படியெல்லாம் வாழ்ந்தேன்.காமராசர் எங்க தாத்தா !அரிச்சந்திரன் எங்க அப்பா!என்னை போல் உண்டோ?அடுத்து என் புள்ளையை அப்துல் கலாம் ஆக்குவேன்!என்னை போய் ...?!" என்று தம்பட்டம் அடித்து கொள்கிறோம்."நான் ரொம்ப கரெக்ட் ஆக்கும் " என்ற எண்ணம் இருப்பதால்தான் ,"அட பாவிகளா!என்னை யாரும் கவினிக்க மாட்டேன்ரீகளே டா " என்கிற ஆதங்கம் வருகிறது.இதே ஆணிவேர் தான் கஷ்டம் வரும்போதும் "ஐயோ !'எனக்கு' இப்படி நடக்கணுமா?"என்று நம்மை அழச் செய்கிறது.
"இது என் பழக்கம்!இதை இப்படிதான் செய்ய வேண்டும் !நான் மாறமாட்டேன் "என ஏன் அடம் பிடிக்கிறீர்கள்  ?

நேர்மையாக வாழ்வது,உண்மையை பேசுவது,பிறர்க்கு உதவுவது,அன்பு செய்வது,அறவழியில் நடப்பது இதெல்லாம் மிக உயரிய குணங்கள்.யாரும் இல்லை என்று சொல்லவில்லை.அனால்,பிள்ளைக்கு உயிர்போனாலும் நான் ஆபீசை  விட்டு வெளியேற மாட்டேன் என முரண்டுபிடிப்பது கடமையா?கொள்கையா ?எனக்கு திடீரென்று கடவுளை வழிபட வேண்டும்போல் உள்ளது,அனால் நான்தான் நாத்திகன் ஆச்சே!நான் எப்படி அப்படி செய்ய முடியும் என நினைப்பது வீண் பிடிவாதம் தானே!

தன வேலையை நேர்மையாக ,உண்மையாக ,கண்ணியமாக,முழு மனதுடன் மகிழ்ச்சியாக செய்திருந்தால் "ஆஹா!என் பதிமூன்று வருஷ நேர்மையை யாரும் போற்றவில்லையே!" என்ற ஆதங்கம் அந்த அம்மாவிற்கு வந்திருக்குமா?நம்முடைய மரியாதையும் புகழும் மகிழ்ச்சியும்  வெளியிலிருந்து  கிடைக்குமா?நிச்சயமாக இல்லை!அப்படி நீங்கள் வெளியே அவைகளை தேடினால்,நீங்கள் ஒரு திருப்தி இல்லாத வாழ்க்கையை மட்டுமே காணமுடியும்.நம்மை தட்டிக்கொடுக்க நம்மால் தான் முடியும்.நம்மை சந்தோஷபடுத்தி கொள்ள நம்மால் தன முடியும்.அது வேறொரு ஆளிடமிருந்தோ ,பொருளிடமிருந்தோ கிடைகிறது என்று நினைத்தால்,நீங்கள் ஒரு அப்பாவி!

சாதனையாளர்களுக்கு விருது கொடுப்பதும் ,ரெகார்டில் குறித்து கொள்வதும் ,மற்றவர்களுக்கு அதை தெரிய படுத்தவே.எல்லாம் வெறும் விளம்பரங்கள்!நம் அங்கிகாரம் நம்மிடம்தான் உள்ளது.அதற்கு வேறு யாரும் உரு கொடுக்க முடியாது.

காலையில்,செம்பருத்தி ஒன்றை ஜன்னல் இடுக்கின் வழி கண்டேன் ,சூரிய வெளிச்சத்தில்,நல்ல தகதகவென மின்னிக் கொண்டிருந்தது .அதற்கு தெரியுமோ என்னவோ?அதனுடைய வாழ்வு வெறும் ஒரு நாள் தான் என்பது!வெறும் சில மணி நேரங்களே !இதற்கிடையில் ,அதனை யாரவது பரித்துக்கொண்டு போகலாம்!அல்லது செடியுடன் வெட்டி சாய்த்து விடலாம்!அல்லது பூச்சி அறித்து  சிதைத்து விடலாம்!என்றாலும் அது போராடுவது போலவோ ,கவலைப்படுவது போலவோ ,முடிவு நெருங்குவதை நினைத்து பயப்படுவது போலவோ,எனக்கு ஒன்னும் தெரியவில்லை!பெரிதாக ஒன்றும் அலட்டிகொள்ளாமல் மாலையில் ,'பாய்' சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறது!

வரிசைக்கட்டி ஊர்ந்து செல்லும் எறும்பிற்கு ,தான் எங்கே செல்கிறோம் என தெரியுமா?!
தெருவில் ஆங்காங்கே சேட்டை செய்துக் கொண்டு திரியும் நாய்களுக்கு நாகரிகம் போதவில்லையே!?
மேலே வந்து உக்கார்ந்த ஒரே குற்றத்திற்காக கொசுவை அடித்து கொன்றுவிடுகிறோம்.அது திருப்பி 'ஏன்டா என்னை அடிச்ச?' என கேட்பதில்லையே!?
அது பாட்டுக்கு தண்ணீர்ல சிவனேன்னு வாழும்,பாவம்! அந்த மீன்களை புடிச்சு கொண்டுவந்து கண்ணாடி பெட்டிக்குள்ள அடைச்சு,நான் உன்னை பாத்துக்குறேன்'என்று கரிசனமாக அழகுபார்கிறோம்.அது பதிலுக்கு ஒரு தடவை முறைச்சதுகூட இல்லையே!
சரி!இதுங்கள எல்லாம் விட்டுருவோம்.வாயில்லா ஜீவனுங்க!நம்மள மாதிரி கண்,மூக்கு,காது இருக்கிற மனிதர்கள் காசா  முனையில  அடிச்சிகிட்டு சாவுராங்களே! தினமும் பேப்பர்  எடுத்தா  ,கொட்ட எழுத்துல  அழறாமாதிரி படமெல்லாம் போட்டு வெளியாகுறத பாத்துகிட்டு தானே இருக்கோம்?"உடனே கிளம்புங்கடா ! போய்  என்னனு கேட்டுட்டு வருவோம்"என யாரும் கொதிக்கிறது இல்லையே?!

அப்புறம் ஏங்க இந்த கோவம்,வன்மம்,சுயபட்சாதாபம் எல்லாம்?"நான் எவ்வளவு செஞ்சிருப்பேன் ?வந்து ஒரு எட்டு என்னனு பாத்தானா  அந்த பாவி?"என சாகும்போதுகூட வருத்தத்தோட போற ஒரே ஏனம் நாம்தான்!கடைசிவரை ஏன் மனிதர்கள் மட்டும் திருப்தியில்லாம செத்துபோயிடுறோம்?

பாடணும்னு தோணுதா பாடிருங்க!ஆடணுமா?ஆடுங்க!மயில்தான் ஆடனும்.குயில்தான் பாடணும்னு சொல்றவன் எல்லாம் ஒரு பக்கம் புலம்பிகிட்டே கிடக்கட்டும்.அதையெல்லாம் பேக்ரௌண்ட் மியூசிக் ஆக்கி நீங்க பெர்பார்மனஸ்  பண்ணிட வேண்டியதுதானே!நமக்கு பிடிச்ச மாதிரி லைப் எப்பவும் இருக்கிறது இல்லையே!கேட்டது எல்லாம் கெடச்சுட்டா ,நினைச்சு பாருங்க ..ஒ மை காட் !செம போரு !
'சரி' 'தவறு' காதல்' 'கடவுள்' இதெல்லாம் நீங்கதான் டிபைன்  பன்னுறீங்க.இதுக்கு இடையில எவனாவது,'லைப்னா  என்னனா...','Life is nothing but .....','Life  is just ...',அப்புடீன்னு வந்தான்னா அதுங்கள அப்படியே ஒதுக்கிவச்சிட்டு உங்கள் வேலையை பாருங்கள்.

'என் மனசு எப்பவும் நேர்மையாக இருக்க சொல்லுது.அதனால நான் இருக்கேன்.எனக்கு அது சந்தோஷத்தை தருது.'என இதை கொள்கையாக ஆக்குங்க. தப்பு செய்வதற்கு முன்னால் எல்லா மனிதர்களுக்குமே  ஒரு எச்சரிக்கை மணி அடிப்பது உண்டு.அங்கே..,அந்த இடத்தில் ..,நிற்பதும்,தாண்டி செல்வதும் ,நம் கையில்!விஷயம் என்னவென்றால் ,அது எல்லாருக்கும் பொதுவான ஆலய மணியல்ல !ஆதலால் வீண் பிடிவாதங்களை விட்டுவிட்டு பயணியுங்கள்!சுழியமான வாழ்க்கையை சூனியமாக்கி கொள்ளாதீர்கள்.வாழ்கையை 'வாழுங்கள்'! ஏனென்றால் ,நாம் ஒன்றும் ,இப்பவோ அப்பவோ என்றிருக்கும் பூவோ,கொசுவோ இல்லையே!    

4 comments:

  1. 'என் மனசு எப்பவும் நேர்மையாக இருக்க சொல்லுது.அதனால நான் இருக்கேன்.எனக்கு அது சந்தோஷத்தை தருது.'//

    சிந்தனை வீச்சு அருமை. தொடர்ந்து இத்தகைய எண்ணவோட்டங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் டாக்டர்.

    ReplyDelete
  2. சிந்திக்கவைக்கும் என்ண ஓட்டங்கள்.

    ReplyDelete
    Replies
    1. @இராஜராஜேஸ்வரி :மிக்க நன்றி வருகைக்கும் ,ஊக்கமளிக்கும் கருத்துரைக்கும் ! :)

      Delete

Please feel free to add your Comments !!
தயக்கமில்லாமல் கருத்துரைக்கவும் !!